காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரிகிறார் சமுத்திரகனி. இவர் காவலர்களுக்கு தனி யூனியன் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடுவதால், அதிகாரிகள் சமுத்திரகனி மீது கோபப்பட்டு சென்னைக்கு மாற்றம் செய்கிறார்கள். சென்னைக்கு வேலைக்கு வரும் சமுத்திரகனிக்கு ரைட்டர் வேலை கொடுக்காமல் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஹரியை பார்த்துக் கொள்ளும் வேலை கொடுக்கிறார்கள்.அப்போது சமுத்திரகனி கொடுக்கும் திட்டத்தால், ஹரியை பொய் வழக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். குற்ற உணர்ச்சியில் தவிக்கும் சமுத்திரகனி, ஹரியை பொய் வழக்கில் இருந்து மீட்க போராடுகிறார். இதில் சமுத்திரகனி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சமுத்திரகனி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இரண்டு மனைவிகளை சமாளிப்பது, குற்ற உணர்ச்சியில் புலம்புவது, ஹரியை காப்பாற்ற துடிப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். அடி வாங்கும் போது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார் சமுத்திரகனி. முழு கதையும் தன் தோளில் துமந்து நடித்திருக்கிறார். தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
சமுத்திரகனிக்கு அடுத்ததாக ஹரி நடிப்பை பாராட்டலாம். நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். பல இடங்களில் நடிப்பால் அசத்தி இருக்கிறார். அண்ணனாக வரும் சுப்பிரமணி சிவா, பாசத்தால் நெகிழ வைத்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் இனியா, நடிப்பில் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். குறிப்பாக போலீஸ் அதிகாரியின் வாகனத்திற்கு முன் குதிரையில் நிற்கும் காட்சி அசத்தல். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். வக்கீலாக வரும் ஜிஎம் சுந்தர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அதுபோல், மகேஸ்வரி, லிசா மற்றும் பலர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
காவல்துறையினரை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிராங்களின் ஜேகப். காவல்துறையில் இருக்கும் அரசியல், பணி சுமை, ஜாதி என அனைத்தையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கதையோடு பயணம் செய்து நம்மையும் கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார். பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.