full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

யாக்கை – விமர்சனம்

நாயகன் கிருஷ்ணா கோயம்புத்துரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நாயகி சுவாதியும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறாள். அவளை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் கிருஷ்ணா. ஒருகட்டத்தில் இருவரும் நட்பாக பழக ஆரம்பிக்க, நாளடைவில் அது காதலாக மாறுகிறது.

சுவாதி படிப்பு மட்டுமில்லாமல், தனது அப்பா நடத்திவரும் ஊனமுற்ற குழந்தைகளின் காப்பகத்திலும் சென்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையை நடத்தி வரும் குரு சோமசுந்தரம், அரிய வகை ரத்தங்கள் உள்ள அனைவரையும் தேடிக்கண்டுபிடித்து, அவர்களை ஏதாவது ஒரு விபத்துக்குள்ளாக்கி, அந்த ரத்தத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்.

இதில், சுவாதியின் ரத்தமும் அரிய வகை ரத்தம் என்று அறியும் குரு சோமசுந்தரம், அவளை நோக்கியும் தனது பார்வையை செலுத்துகிறார். இதற்கிடையில், சென்னையில் குரு சோமசுந்தரத்தின் அப்பாவான ராதாரவி மர்மமான முறையில் இறக்கிறார். அவரது கொலை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி பிரகாஷ் ராஜ் கொலைக்கான காரணத்தை தேடுகிறார். ஒருகட்டத்தில் குரு சோமசுந்தரம் அந்த கொலையை செய்திருப்பாரா? என்ற சந்தேகமும் அவருக்கு எழுகிறது. ஆனால், அவர் அந்த கொலையை செய்யவில்லை என்பது தெரியவருகிறது.

அப்படியானால் ராதாரவியை கொன்றது யார்? அவருடைய கொலைக்கு பின்னணி என்பதை பிரகாஷ் ராஜ் கண்டுபிடித்தாரா? குரு சோமசுந்தரத்தால், சுவாதியின் நிலை என்னவாயிற்று? என்பதற்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

கல்லூரி நாயகனாக கிருஷ்ணா துள்ளலான நடிப்பில் அசத்தியிருக்கிறார். சுவாதியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் தனது திறமையான நடிப்பில் கவர்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் செண்டிமெண்டாக நடித்து அனைவரையும் அழ வைத்திருக்கிறார்.

சுவாதி படத்தில் ரொம்பவும் அழகாக தெரிகிறார். இவர் கொடுக்கும் ஒவ்வொரு முகபாவணைகளும் அத்தனை அழகு. படத்தில் ரொம்பவும் மெச்சூரிட்டியான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளிடம் இவர் பழகும் காட்சிகள் எல்லாம் அருமை.

விசாரணை அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் அலட்டல் இல்லாத நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். இவருக்கு ஆக்ஷன் என்று எதுவுமே இல்லாவிட்டாலும், அமைதியாக வந்து அசத்தியிருக்கிறார். வில்லனாக வரும் குரு சோமசுந்தரத்தை ‘ஜோக்கர்’-இல் பார்த்து ரசித்த அளவுக்கு இந்த படத்தில் ஏனோ முழுமையாக ரசிக்க முடியவில்லை. கோட் சூட் என இவர் பேசும் ஆங்கில வசனங்கள்கூட ரொம்பவும் செயற்கையாக இருப்பதுபோல் தெரிகிறது. ராதாரவி ஒன்றிரண்டு காட்சிகள் வந்து, தனது நடிப்பை நிறைவு செய்திருக்கிறார்.

இயக்குனர் குழந்தை வேலப்பன் பணத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடும் தனியார் மருத்துவத்துறையின் தகிடுதத்தங்களை படம் பிடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கிறார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். ஆனால், படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருப்பதால் படம் எதிர்பார்த்த சுவாரஸ்யத்தை கொடுக்கவில்லை. அதேபோல், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அனைவருக்கும் நன்கு புரியும்படியும் படத்தை கொடுத்திருக்கலாம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் நிறைவாக இருக்கிறது. சத்யா பொன்மாரின் ஒளிப்பதிவு நிறைய காட்சிகள் நமக்கு அழகிய ஓவியமாக தெரிகிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா மேலும் பளிச்சிடுகிறது.

சினிமாவின் பார்வையில் ‘யாக்கை’ நம்பிக்கை இல்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *