இயக்குநர் சத்யாவின் இயக்கத்தில் சச்சின், இஷா குப்தா, பிரபு, கிஷோர், சதீஷ் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் ‘யார் இவன்’.
திருமணமான முதல் நாளிலேயே இஷா குப்தா, தனது காதல் கணவன் சச்சினால் சுட்டுப் படுகொலை செய்யப்படும் காட்சியோடு பரபரப்பாக தொடங்குகிறது படத்தின் கதை.
இஷா குப்தா உடலைத் தேடும் போலீசாருக்கு கிடைக்காமல் போய் விட, சச்சினை கைது செய்து சிறையில் அடைத்து விசாரிக்கின்றனர் போலீசார்.
காதல் கணவனான சச்சின், திருமணமான முதல் நாளிலேயே இஷா குப்தாவை கொலை செய்தது ஏன்? அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி என்ன பிரச்சினை? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரி கிஷோருக்கு சச்சின் நிரபராதியாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் வலுக்கிறது.
ஆனால், சச்சினின் பேச்சும், நடவடிக்கையும் அவனை ஒரு சைக்கோவாக காட்டுகிறது.
சச்சின் தான் உண்மையில் கொலையாளி என்றால், கொலைக்கான காரணம் என்ன? அல்லது கிஷோரின் எண்ணப்படி சச்சின் நிரபராதி என்றால் கொலைக்கு காரணமானவர்கள் யார்? ஏன்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் மிக அழகாக தெளிவுபடுத்தி இருக்கிறார் இயக்குனர்.
சச்சின் இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தி நடிகை இஷா குப்தா காதல் காட்சிகளிலும், பாடல்களிலும் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கிறார்.
கதாநாயகியின் தந்தையாக வரும் பிரபுவுக்கு குறைவான காட்சிகள் தான் என்றாலும் தனது திறன் பட்ட நடிப்பால் கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்.
பல்வேறு திருப்பங்கள் நிறைந்துள்ள கதைக்கு, விறுவிறுப்பான திரைக்கதையும், பிரவினின் படத்தொகுப்பும் மேலும் வலு சேர்த்திருக்கிறது.
கதாநாயகனின் நண்பனாக வரும் சதீஷின் நகைச்சுவை காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.
தமனின் இசையில் பின்னணி அருமை. பாடல்கள் சுமார் ரகம்.
சினிமாவின் பார்வையில் ‘யார் இவன்’ – ரசிக்கலாம்.