சென்னையில் ரூபாய் நோட்டுக்களை எண்ணக்கூடிய மிஷின்களை சேல்ஸ் செய்பவராக இருந்து கொண்டு, தந்தை, தாய், தங்கை ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கலையரசன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கலையரசனின் தங்கை பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கலையரசனின் தங்கை டாக்டராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார். பெற்றோர்களும் அதே ஆசையோடு இருக்கிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் 1150க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுகிறார் கலையரசனின் தங்கை. இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தும் அவருக்கு டாக்டர் சீட் கிடைக்காமல் போகிறது. எப்படியாவது தங்கையை டாக்டராக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஒரு புரோக்கர் மூலம் 50 லட்சம் பணம் கொடுத்து மருத்துவ கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்.
கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகிறது. இதனால், அந்த கல்லூரியில் படிக்கும் கலையரசனின் தங்கை, மற்றும் பல மாணவர்களின் படிப்பு வீணாகிறது.
பணம் கொடுத்து சேர்ந்ததால், அந்த பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் இறங்குகிறார் கலையரசன். ஆனால், அந்த புரோக்கர் கலையரசனை மிரட்டி அனுப்பி விடுகிறார். இந்நிலையில், ஒரு சாலை விபத்தில் கலையரசனின் தங்கை இறந்து விடுகிறார். இது திட்டமிட்ட கொலை என்றும், புரோக்கர்தான் காரணம் என்றும் அவர்களை பழிவாங்க எண்ணுகிறார். இதனால், புரோக்கர் மீது புகார் கொடுக்கிறார் கலையரசன். ஆனால், போலீஸ் எல்லாம் அவர்கள் பக்கம் சாதகமாக இருப்பதால் பலன் கிடைக்காமல் போகிறது.
தன் தங்கைக்கு நேர்ந்த இந்த நிலைமை, வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று நினைத்து கல்லூரியில் சேர்வதற்காக பணம் வாங்கும் கும்பலுக்கு எதிராக போராடுகிறார் கலையரசன். இறுதியில் இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன், தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கை மீது பாசம் காட்டுவதும், மாணவர்கள் மீது அக்கறை காட்டுவதுமாக நடித்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். முந்தைய படங்களை காட்டிலும் இப்படத்தில் நடிப்பில் நல்ல முதிர்ச்சி.
பிச்சைகாரன் படத்தில் நடித்த சாத்னா டைட்டஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். போலீஸ் எஸ்.ஐ. யாக மிடுக்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் உடையில் அழகாக இருக்கிறார்.
தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஆடுகளம் நரேன். வில்லனாக நடித்திருப்பவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை எடுத்து அதை படமாக்கி சரியான நேரத்தில் வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் சக்தி ராஜசேகரன். முதல் படத்திலேயே சமூக அக்கறை உள்ள கதையை எடுத்து இயக்கியிருப்பது சிறப்பு. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இது விழிப்புணர்வு படமாக அமைந்திருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களிடமும் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். கதாபாத்திரங்களும் யதார்த்தமாக நடித்து கதையோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். பெற்றோர்கள் தன் பிள்ளைகளை ஒரு கல்லூரியில் சேர்க்கும் முன் அந்த கல்லூரி ஒரு தரமான கல்லூரியா என்று விசாரிக்க வேண்டும் என்ற கருத்தை அழகாக சொன்னதற்கு இயக்குனருக்கு பெரிய கைத்தட்டல்.
பிரேம் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. பல காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பார்டவ் பார்கோ இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.