full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

எந்த நேரத்திலும் – விமர்சனம்

நாயகன் ராம கிருஷ்ணன் ஊட்டியில் தன் அப்பா, மற்றும் அக்கா சான்ட்ரா எமி, மாமா யஷ்மித், இவர்களின் குழந்தை ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இதே ஊரில் இருக்கும் நாயகி லீமா பாபுவை பார்த்தவுடன் காதல் வயப்பட்டு, காதலை சொல்லி இருவரும் காதலித்து வருகிறார்கள்.

தன்னுடைய காதல் விஷயத்தை அக்கா சான்ட்ரா எமியிடம் சொல்லுகிறார் ராம கிருஷ்ணன். இவரின் காதலுக்கு ஓ.கே சொன்ன சான்ட்ரா எமி, பின்னர் லீமா பாபுவை பார்த்தவுடன் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். மேலும் சான்ட்ராவின் கணவர் யஷ்மித்தும் லீமா பாபுவை வியப்போடு பார்க்கிறார். இந்நிலையில், யஷ்மித்தும், சான்ட்ராவின் அப்பாவும் விபத்தில் இறந்து விடுகிறார்கள்.

மன ஆறுதலுக்காக சான்ட்ராவும் ராம கிருஷ்ணாவும் கோத்தகிரியில் உள்ள பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு லீமா பாபுவின் உருவம் கொண்ட ஒரு பெண்ணின் ஆவி சான்ட்ராவின் குழந்தை மேல் புகுந்து சான்ட்ராவை கொலை செய்ய முயல்கிறது.

லீமா பாபு உருவம் கொண்ட ஆவி சான்ட்ராவை கொலை செய்ய முயல்வது ஏன்? அந்த ஆவியிடம் இருந்து தன் அக்கா சான்ட்ராவை ராம கிருஷ்ணன் காப்பாற்றினாரா? தன் காதலியுடன் ராம கிருஷ்ணன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராம கிருஷ்ணன், நடனம், நடிப்பு என கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் லீமா பாபு முதல் பாதியில் துறுதுறு பெண்ணாகவும், இரண்டாம் பாதியில் ஆவியாகவும் மிரட்டியிருக்கிறார். அக்காவாக நடித்திருக்கும் சான்ட்ரா எமி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாடர்ன் பெண்ணாகவும், வில்லியாகவும், ஆவிக்கு பயப்படும் பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ஆவிக்கு பயப்படும் காட்சியில் கைத்தட்டல் பெறுகிறார். இந்த படத்தில் சான்ட்ராவுக்கு நடிப்பு திறனை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் யஷ்மித். காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்கும் இவருக்கு அதிக காட்சிகள் வைக்காதது வருத்தம். ஆவி பிடித்த குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி விஜிதா நடிப்பில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். முதல் பாதியில் அதிகம் எடுபடாத சிங்கம் புலியின் காமெடி, பிற்பாதியில் கை கொடுத்திருக்கிறது.

காதல், கொலை, பங்களா, ஆவி என வழக்கமான பேய் பட பாணியில் படம் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.முத்துக்குமார். முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு. சில லாஜிக் மீறல்கள், யூகிக்கும் படியான காட்சிகளை தவிர்த்திருக்கலாம். பயமுறுத்தும் காட்சிகளை வைத்திருக்கலாம்.

அஸ்மினின் வசீகரிக்கும் பாடல் வரிகள்  மற்றும்  சதீஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சபேஷ் – முரளியின் பின்னணி இசை படத்திற்கு பலம். சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு ஊட்டி, கோத்தகிரி பகுதிகளை அழகாக படம் பிடித்திருக்கிறது.

சினிமாவின் பார்வையில் ‘எந்த நேரத்திலும்’ – பயம் குறைவு.