இந்த வருடம் பிப்ரவரி மாதம் தனது பயணத்தை தொடங்கிய இந்தியாவின் முதல் என் எஃப் டி (NFT) திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவிஸ், மிகக் குறுகிய காலத்தில் திரைத்துறையையும் தாண்டி கவனத்தை ஈர்த்து வருகிறது.
திரைப்பட வர்த்தகம் நடைபெறும் முறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் என்எஃப்டி திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவீஸை நிறுவியுள்ளனர்.
பல்வேறு இந்திய மொழிகளை சேர்ந்த சுமார் 1000 படங்கள் ஆரக்கள் மூவிஸ் உடன் ஏற்கனவே இணைந்துள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். ஆரக்கள் மூவீஸ் இந்திய திரைப்படங்களை சர்வதேச அளவில் இதுவரை சென்றடையாத சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதோடு, உலகளவிலான படங்களை வெளியீடு, டப்பிங் மற்றும் ரீமேக்கிற்காக இந்தியாவுக்கு கொண்டு வரும்.
இதன் மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களின் வருவாய் அதிகரிப்பதோடு, இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை இன்னும் பெரியளவில் சென்றடைய முடியும்.
ஆரக்கள் மூவிஸ் ஏற்படுத்தி வரும் நம்பிக்கைக்கு சான்றாக, மத்திய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதித் திட்டத்தின் கீழ் ரூ 25 லட்சம் பெற இந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் உயர்சிறப்பு மையமாக அடையாளம் காணப்பட்டுள்ள வேல் டெக் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான வேல் டெக் தொழில்நுட்ப வர்த்தக வழிகாட்டி மையம் (Vel Tech Technology Business Incubator), ஆவடி, கடுமையான தேர்வு முறைக்கு பின்னர் ரூ 25 லட்சம் விதை நிதிக்கு ஆரக்கள் மூவிஸை தேர்ந்தெடுத்துள்ளது.
