பிரபல மலையாள இயக்குநர் அனில் தமிழில் தடம் பதிக்கிறார், சந்தோஷ் தாமோதரன் தயாரிப்பில் சௌந்தரராஜா-தேவானந்தா நடிப்பில் ‘சாயாவனம்’ படத்தை இயக்குகிறார்

cinema news

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அனில், சௌந்தரராஜா மற்றும் தேவானந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘சாயாவனம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதிக்க உள்ளார். இந்தப் படத்தை தாமோர் சினிமா பேனரில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார்.

நாற்பதுக்கும் மேற்பட்ட மலையாள படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அனில், முன்னணி மலையாள ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார். அவரது சமீபத்திய படம் ‘மையா’ இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இயக்குநர் அனில் இயக்கிய ‘பகல்பூரம்’ படத்தின் மூலம் தாமோர் சினிமா தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியது. இந்த தயாரிப்பு நிறுவனம் இதுவரை ‘வாழ்கண்ணாடி’, ‘இவர்’, ‘சந்திரோற்சவம்’, ‘குருஷேத்ரா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

‘கடைக்குட்டி சிங்கம்’, ‘தர்மதுரை’, ‘சுந்தரபாண்டியன்’ புகழ் சௌந்தரராஜா ‘சாயாவனம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். சௌந்தரராஜா கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் ‘ஒரு கனவு போல’, ‘காமெடி மன்னன்’ கவுண்டமணியுடன் ‘எனக்கு வேறு எங்கும் கிடையாது’ படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

‘சாயாவனம்’ பற்றி பேசிய இயக்குநர் அனில், தனது தமிழ் திரையுலக என்ட்ரிக்கு வித்தியாசமான ஸ்கிரிப்ட் தேவை என்று கருதியதாக கூறினார்.

“படத்தின் தலைப்பு ‘அடர்ந்த காடு’ என்று பொருள்படும், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும். தேவானந்தா நடிக்கும் சீதை கதாபாத்திரத்தைச் சுற்றி கதை நகர்கிறது. கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொண்ட சௌந்தரராஜா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ” என்றார் இயக்குநர் அனில்.

மேலும், படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்று நான் நம்புகிறேன். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் காடுகளைப் போல அடர்த்தி மிக்கவை, அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவை  எல் ராமச்சந்திரன் கையாள்கிறார். மோகன வீணை நிபுணரான போலி வர்கீஸ் இசையமைத்துள்ளார். படத்திற்கு எடிட்டிங்கை அருள் சித்தார்த் மேற்கொள்கிறார்.

மலையாள திரைப்பட இயக்குநர் அனில், சௌந்தரராஜா மற்றும் தேவானந்தா நடிப்பில் தாமோர் சினிமா தயாரிப்பில் ‘சாயாவனம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.